Thursday, November 27, 2008

இறையறிவு !

இடது சக்தி என்றால்
வலது சிவன் தானே;
இடதும் வலதும் இணைந்தால்
சீவன் தோன்றும் எனலாம்!

சிவனோடு சக்தி சேர்ந்தால்
சிவன் சீவன் என்றாகிறது;
சீவன் என்றால் அறிவு;
அறிவு என்பது சுழுமுனையாகும் !

இடம் வலம் சுழுமுனை
இவை மூன்றும் சரியாய்
இருந்தால் தோன்றும் தன்னுணர்வு;
தன்னை தன்னில் அறிவதேநலம்!

தன்னை அறிவது ;தலைவனை
அறிவது;தலைவனை அறிவது
தன்னுள் தானடங்கி விளங்கும்
இறையை அறிவதேநலம்!

உறவும் நட்பும் !

உறவினும் உயர்ந்தது நட்பு ;அந்த
நட்பினும் உயர்ந்தது ஒன்றில்லை
ஒன்றுக்குள் ஒன்றாவது நட்பு ;
ஒன்றை ஒன்று பினப்பது உறவு !

உறவென்றால் பிரிவும் உண்டு ;
பிரிவென்றால் துயரமும் உண்டு;
பிரிவும் துயரமும் நட்புக்கு இல்லை ;
இணைவது நட்பு பிரிவது உறவு;

பெற்றுகொடுப்பது உறவின் இயல்பு ;
விட்டுகொடுப்பது நட்பின் சிறப்பு;
பெற்றதை கொடுப்பது நட்பின் உயர்வு ;
உற்றதை உணர்வதே உறவின் சிறப்பு;

குசேலன் பெற்றதும் நட்பின் வழியே ;
சுந்தரன் கற்றதும் நட்பின் மொழியே;
கர்ணன் உற்றதும் நட்பின் உயர்வே;
கற்றதும் பெற்றதும் உற்ற நட்பின் சிறப்பே!

Wednesday, November 26, 2008

பிறப்பும் இறப்பும் !

பிறப்பும் இறப்பும் புதிர் என்பார் புரியாதோர்;
பிறப்பையும் இறப்பையும் புரிந்து கொள்ள,
பிறப்பே இறப்பின் மறு வடிவம் என்றாகும் ;
பிறப்பின் சிறப்பே இறப்பென்று விளங்கும் !

விதை அழிந்தால் செடி முளைக்கும் ;
இலை யுதிர்ந்தால் பூ பூக்கும் ;
பூவினுக்குள்ளே காய் இருக்கும்;
காய் அழுகிட கனி யாகும் ;

நிகழ்ந்ததை மறந்து நிகழ்தலில் மகிழ்வோம் ;
மகிழ்தலும் புகழ்தலும் இயல்பென்றிருப்போம்;
இயல்பே இறைஎன்ற உண்மையை உணர்வோம்;
உணர்வே உண்மையென்ற தன்மையை பெறுவோம்;

தவம்

தவறென்று நினைத்த தெல்லாம்
சரியாக மலர்ந்தது ; நாம்
சரிஎன்று கணித்த தெல்லாம்
தவறாக மாறி விளைந்தது !

தவறெல்லாம் சரியானது; சரிஎல்லாம்
தவறானது ; தவறென்றும் சரிஎன்றும்
சரியாக கணிப்பதற்கு முறையான
தவம் முழுதாக வேண்டும் !

எளிதென்று நினைத்த தெல்லாம்
அரிதானது ; அரிதென்று மலைத்த
தெல்லாம் எளிதானது ;எளியது
அரிதானது ; அரியது எளிதானது !

எளியதும் அரியதும் புலன்கள்
அறியா புதிரானது ; புரியாத்
புதிரெல்லாம் புலனாவதற்கு
முறையான தவம் முழுதாக வேண்டும் !

உறவென்று நினைத்த தெல்லாம்
பகையானது ;பகைஎன்று வெறுத்த
தெல்லாம் உறவானது ; உறவு
பகையானது ;பகை உறவானது ;

உறவும் பகையும் உணர்வானது;
உறவும் பகையும் வாழ்வில்
சரியாய் உணர , முறையான
தவம் முழுதாக வேண்டும்!

Wednesday, July 23, 2008

இறை நிலை

கல் கரைந்தால் மண்ணாகும் அந்த
மண்ணில் ஒரு வாசம் வீசும்
காய் கனிந்தால் பழமாகும் அந்த
பழத்தில் புது சுவை கூடும்

மொட்டவிழ்ந்தால் மலராகும் அந்த
மலரில் நறுமணம் பரவும்
பிறை வளர்ந்தால் முழு நிலவாகும் அந்த
நிலவில் ஒளி குளிர் கூடும்

மண்ணில் பொழிந்த மழையும்
மரத்தில் பழுத்த பழமும்
செடியில் பூத மலரும்
விடியலில் எழுகின்ற சூரியனும்

விண்ணில் தவழும் நிலவும்
பண்ணில் காசயும் இசையும்
என்னில் ஊரும் கவியும்
இறை நிலை இவைஎன்று அறிந்தேன்.

இறை பெருமை

காதலர்களை உலகமே காதலிக்கும்
அவர்தம் பெற்றோர்களை தவிர
கற்றாரை கற்றோர் காமுறுவர்
அவர்தம் உற்றாரை தவிர

வைகையில் வெள்ளம் புரண்டாலும்
ஆற்றோரம் குடிஇருப்போர் அல்லலுறுவர்
தாமரையில் வண்டு வந்து தேன்குடிக்கும்
இலையில் இருக்கும் மண்டூகம் அறியுமோ தேன்சுவையை

நிழலுக்கு கிடையாது நினைக்கும் தன்மை
விழலுக்கு விளங்காது நீரின் அருமை
தழலுக்கு தெரியாது உயரின் உண்மை
கழலுக்கு புரியாது கால்களின் பெருமை

அடர்ந்து படர்ந்து நிறைந்து நிற்கும்
உள்ளம் கடந்து உயிராய் விளங்கும்
கதிரும் நிலவும் கண்களாய் ஒளிரும்
இறை பெருமை யார்தான் அறிவாரோ!

இறை புதிர்

கற்பனைக்கு எட்டாதது கைகளில் சிக்காதது
அற்பர்களின் அறிவுக்கு அகப்படாதது
அற்புதங்களுக்கு எல்லாம் ஆதார நிலையது
பொற்பதம் அளித்து பூரிக்க வைப்பது

மனம் கடந்து மயங்கிய நிலையில்
இனம் கண்டு இன்பம் அளிப்பது
உணர்வுகளுக்கு எல்லாம் ஊற்று கண்ணது
உண்மையை உணர்ந்த உன்னத நிலையது

புதிராய் தெரியும் புலன்களை மயக்கும்
கதிராய் ஒளிரும் நிலவாய் குளிரும்
எளிதாய் இருக்கும் இயல்பாய் திகழும்
இறையென அறிந்தால் இன்பம் பெருகும்

இயற்கையின் நியதி

நடக்கணும் என்றால் நடந்தே தீரும்
பிறக்கணும் என்றால் பிறந்தே தீரும்
நடப்பதை எவரும் தடுப்பது கடினம்
பிறப்பதை எவரும் தவிர்ப்பது கடினம்.

நடந்ததை ஏற்றலும் பிறந்ததை போற்றலும்
கடந்ததை மறத்தலும் சிறந்ததை நினைத்தலும்
நிகழ்தலில் இருத்தலும் இருத்தலில் மகிழ்தலும்
இயற்கையின் நியதி இதுவென உணர்க.

ஆக்கமும் ஊக்கமும் உயர்ந்தோர் மாண்பது
போற்றலும் புகழுதலும் புண்ணியர் இயல்பு
மாற்றமும் மயக்கமும் மனதின் இயல்பு
தோற்றமும் மறைவும் இயற்கையின் நியதி.

மரம்

வேரில் உண்டு இலையில் சிரிக்கும்
ஊனில் கலந்து உயிராய் திகழும்
தேரில் இணைந்து கலையாய் மிளிரும்
நீரில் மிதந்து படகாய் காக்கும்.

நீர் கொடுக்க நிழல் கொடுக்கும்
யார் பசிக்கும் கனி கொடுக்கும்
வாழும் பொழுது மரமாய் நிற்கும்
வீழ்ந்த பின்னும் துணையாய் தொடரும்.

தன்னில் பழுத்த பழங்களை
தான் உண்பது இல்லை
தன்னில் படர்ந்த நிழலில்
தான் அமர் வதும் இல்லை.

மேலென்று கீழென்று ஏதுமில்லை
உயர்வென்று தழ்வேன்ற நிலையுமில்லை
சூதும் வாதும் புரிவதுமில்லை
பேதம் அறியாது பிரிவும் உணராது .

Thursday, May 22, 2008

இறையுணர்வு

உண்ணும் போது உன்னை நினைத்தேன்
உணவின் பயனாய் உடலானை
என்னும் போதும் உன்னை நினைத்தேன்
எண்ணிய பயனாய் அறிவானாய்

பருகும் போது உன்னை நினைத்தேன்
நீரின் பயனாய் உயிரானாய்
துயிலும் போது உன்னை நினைத்தேன்
துயின்ற நிலையிலும் உணர்வானாய்

உடலும் அறிவும் உயிருடன் கலந்த
உன்னத நிலையில் என்னை கண்டேன்
இறையுணர்வென்ற உண்மை உணர்ந்தேன்
நிறைநிலை என்ற திருவருள் பெற்றேன்

கண்ணில் காணாத செவியில் கேளாத
விண்ணின் ஒளியை புவியின் இசையை
என்னில் கண்டேன் இயல்பாய் கேட்டேன்
இறையை உணர்ந்தேன் இன்பம் அடைந்தேன்

Sunday, May 4, 2008

மே தினம்

மே தினம் மேன்மையான தினம்
மேலான சிந்தனை கொண்ட
மேலோர் தினம் எனலாம்
மேலோர் என்பவர் யாவரெனில்
தான் படைத்த தெல்லாம்
தன தென்றே கொள்ளாமல்
இம் மேதினி எல்லாம்
பயனுற உழைபவரெணலாம்!

உழைப்பு என்பது யாதெனில்
ஊனுருக உள்ளே உயிர் உருக
நெற்றி வியர்வை நிலத்தில்
சிந்த கரத்தாலும் கருத்தாலும்
படைக்கும் செயலே உழைபதுவாகும்
படைப்பு என்பது யாதெனில்
இயற்கையின் கொடையை எளிதாய்
எல்லோரும் பெறவே அளிப்பதுவாகும்

இறையின்பம்

நிகழ்தலும் நிகழத்துதலும் நீயன்றோ நினை
புகழ்தலும் புணர்தலும் என் இயல்பன்றோ
உண்மையும் உணர்வும் நீயன்றோ நின்
உறவும் உரிமையும் என் தவமன்றோ

உண்மை என்று எதனை சொல்வேன்
உரிமை என்று எதனை கொள்வேன்
உறவு என்று எதனை உணர்வேன்
துறவு என்று எதனை துறப்பேன்

உண்மை என்பது துறவின் விழி
உரிமை என்பது உணர்வின் வழி
உறவு என்பது உறவின் மொழி
விழிவழி மொழிவது இறையின்பம்

Monday, April 21, 2008

கேள்வியும் பதிலும்

எனக்கு கேட்கத்தான் தெரியும்;
வாயினால் அல்ல, செவிகளால் தான்;
பதில் என்னிடமே உள்ளது;
கேள்வியும் பதிலும் இறையருள் தானே!

எனக்கு பார்க்கத்தான் தெரியும்;
விழிகளால் அல்ல; உள்ளுணர்வால் தான்;
காட்சி என்னிடமே உள்ளது;
காட்சியும் சாட்சியும் இறையருள் தானே!

எனக்கு வழிபடத்தான் தெரியும்;
மொழிகளால் அல்ல; மெய்யுணர்வால் தான்
வழிபடு என்று என்னை வழிபடுத்துவதே
என்னுள் உறையும் இறையருள் தானே!

கேள்வி என்பது பதிலின் விதையாகும்;
பார்வை என்பது அறிவின் நிலையாகும் ;
இயற்கை என்பது இறைவடிவாகும்;
இறையருள் ஒன்றே ஈடில்லா பதிலாகும்!

திருவருள்

உண்மை இது; நன்மை இது; உயர்ந்தவர்கள்
கண்ட உலகமிது; மண்புலம்
தழைக்க, தென்னவர் உரைத்த
உன்னத ஞான உலகமிது!


விண்ணில் வெளியாய் திகழும்;
கண்ணில் ஒளியாய் மிளிரும்;
மண்ணில் உயிராய் உலவும்;
என்னில் இயல்பாய் விளங்கும்!

நானறிந்த நானும், என்னை
நீயறிந்த நானும் ஒன்றல்ல;
என்ற உண்மையை நீ உணர்ந்தால்
உன்னிலை தானே உயரும்!

அன்று நானும் நீயும் வேறல்ல;
என்று என்னை அறிய எனக்கருள்
செய்த குருவை மறவேன் குருவருள்
பெறுவேன் பெருநிலை அடைவேன்.

Sunday, April 20, 2008

மெய்ஞானம்

விஞ்ஞானம் மனம் சார்ந்தது அல்ல
மனதை விஞ்சி நின்ற ஞானம்
மனம் கடந்த நிலை; அறிவே ஆதாரம்
மெய்ஞானம் என்றால் உண்மை அறிவு

மனம் மொழி மதம் கடந்த அறிவு
தன்னை அறிவது; தன் இருப்பை அறிவது;
உண்மை அறிவது உயிரை அறிவது
உள்ளதை உள்ளவாறே உணர்வது அறிவு!

கண்டுபிடிப்பு என்றால் கண்களால் அல்ல
கேள்விகளால் விளங்கும் செவிகளால் அல்ல
புலப்படும் ஆனால் புலன்களால் அல்ல
அறிவை கொண்டு எதையும் அறிவதே ஞானம்

விந்தைமிகு இஞ்ஞானம் தன்னை
எந்தையர் ஆயிரம் அறிஞர்கள்
அறிந்தனர், அறிந்ததை அறிந்தவாறே
ஈந்தனர் நமக்கு; அதுவே மெய்ஞானம்!

தாயும் சேயும்

விண்ணில் வெளியாய் திகழும்
கண்ணில் ஒளியாய் மிளிரும்
என்னுள் இயல்பாய் நிகழும்
தன்னுள் தானடங்கி வாழும்
நானறிந்த நீயும் என்னில்
நீயறிந்த நானும் வேறல்ல
சேயறிந்த தாயும் தனில்
தானறிந்த சேயும் வேறல்ல
உடலும் உயிரும் உறைவதுபோல
கடலும் கரையும் இணைவதுபோல
மலரும் மனமும் திகழ்வதுபோல
தாயும் சேயும் வேறுவேறல்ல

இருளும் ஒளியும்

வைகறைக் காலையில் விலகிடும் இருளில்
மையலின் மாலையில் கலந்திடும் இருளில்
மௌனமே மொழியாய் மயங்கிய நிலையில்
மலர்ந்திடும் ஒளியே; வளர்ந்திடும் கலையே!
உன்னை என்னென்பேன்?
எண்ணில் கண் என்பேன்
பெண் என்பேன்; பெருநிலைஎன்பேன்
உன்னில் கலந்தேன்; உயிரில் உணர்ந்தேன்
விண்ணில் பறந்தேன்; வெளியில் கலந்தேன்;
உண்மை உணர்ந்தேன்; என்னை மறந்தேன்
இருளும் ஒளியும் இறையென அறிந்தேன்;
பெருநிலை புரிந்தேன் பேரின்பம் அடைந்தேன்

மொழி

மௌனம் என்பது மொழியாகும்;
ஞானம் அதன் வழியாகும்;
விழிவழி மொழிவது எழிலாகும்;
செவிவழி அறிவது இயல்பாகும்.

பாடும் குயிலும் ஆடும் மயிலும்
பேசும் கிளியும் ஓடும் மானும்
கரையும் காகமும் விரையும் மேகமும்
கூறும் குறிப்பும் மொழியாகும்!

கண்களால் கான முடியாதவற்கு
புள்ளிகளால் ஆன ப்ரைல்லி மொழியாகும்
காதுகளால் கேட்க இயலாதவற்கு
விரலசைவில் செய்கை ஒரு மொழியாகும்!

முந்தையர் ஆயிரம் தந்திரம்
சொன்னதும் மந்திரம் என்னும் மொழியாலே
சிந்தையில் பிறந்ததை சொற்களில்
தந்ததும் விந்தைமிகு மொழியாலே!

இரவின் மொழி இருளாகும்
பகலின் மொழி ஒளியாகும்
இயல்பின் மொழி ஒலியாகும்
உயரின் மொழி உறவாகும்!

இசையும் நடனமும் மொழியாகும்
இரண்டும் சேர்ந்தது கலையாகும்
உணர்வே இன்ப மொழியாகும்
இதுவே தெய்வ நிலையாகும்.

இயற்கையின் எழில்

நீலவானம்; பச்சை பூமி
நெடிய மரங்கள்; உயர்ந்த மலைகள்
சிவந்த கனிகள் வண்ணமலர்கள்
என்னை அழைக்கும் இயற்கை எழில்கள்
எழுகின்ற சூரியன்; விழுகின்ற அருவி
குளிர்ந்த நிலவு தென்றல் காற்று
ஓடும் நதியில் நீந்தும் மீன்கள்
என்னை அழைக்கும் இயற்கை எழில்கள்
விண்ணில் பறக்கும் வண்ண பறவை
என்னில் தோன்றும் இன்ப ஊற்று
விழி விரிந்து மொழி மறந்தேன்
என்னை இழந்தேன் இயற்கை எழிலில்.
உறவினைக் கண்டேன் வண்ணங்கள் வடிவில்;
இறைவனைக் கண்டேன் இயற்கையின் எழிலில்;
வண்ணமும் வடிவமும் இறைநிலை என்ற
உண்மையை உணர்ந்தேன் உள்ளம் குளிர்ந்தேன்

இறையருள்

பூத்த தெல்லாம் காய்ப்பதில்லை
காய்த்த தெல்லாம் பழுப்பது இல்லை
பழுத்த தெல்லாம் விழுவதில்லை
விழுந்த தெல்லாம் விளைவதில்லை
விழுந்த தெல்லாம் பூத்திடவேண்டும்
பூத்த தெல்லாம் காய்த்திடவேண்டும்
காய்த்த தெல்லாம் கனிந்திடவேண்டும்
கனிந்ததெல்லாம் பயனுரவேண்டும்
பூக்கும்போது ஒரு நறுமணம்
காய்க்கும்போது ஒரு வாசம்
பழுக்கும்போது ஒரு நிறைகுணம்
முழுமையடைய இறையருள் வேண்டும்
தன்குணம் தான் அறியாது
தன்னை கொடுத்து தானும் வாழும்
இயற்கையின் நிலையில் நானும்
இயல்பாய் வாழ இறையருள் வேண்டும்
விண்ணில் உலவும் நிலவின் குளிரும்
மண்ணில் மலரும் மலரின் மணமும்
தன்னில் இயல்பாய் கண்ணில் கனிவும்
என்னில் பெறவே இறையருள் வேண்டும்