Monday, November 14, 2011

பார்வை

ஒரு நாள் என்னை உற்றுபார்த்தேன்
மறு நாள் மீண்டும் தொடர்ந்து பார்த்தேன்
மனமும் உடலும் மயங்கிய நிலையில்
செத்த உடலை சட்டென பார்த்தேன் !

கற்றதை எல்லாம் மறந்து பார்த்தேன்
புத்தகம் போல பிரித்து பார்த்தேன்
சித்தகம் புகுந்து சிந்தனை இழந்தேன்
வித்தகம் விளைந்தது விந்தைகள் பிறந்தது

எனது என்று நினைத்ததை எல்லாம்
தனது என்று யார்யாரோ சொன்னார்
நினைவென்று நினைத்தது எல்லாம்
கனவாய் முடிந்தது கதையாய் விளைந்தது!
பு.செ.மணிவண்ணன்

Saturday, January 23, 2010

முகவுரை

அகத்தில் தோன்றிய உணர்வுகளெல்லாம்
முகத்தின் மொழியாய் வழிவதுபோல
கருத்து மலர்களை கவிதை மாலையாக்கி
தொகுத்து வழங்க துணையாய் நின்ற

எனதருமை நண்பர்கள்;
 
 

என்னுரை

கற்றலும் கேட்டாலும் இறையை
உற்றலும் உணர்தலும் இயல்பாய்
பெற்றதை மகிழ்ந்து போற்றலும்
என் வாழ்வு இதுவே என்னுரை

Monday, August 3, 2009

கண்ணைக் கண்டேன் வண்ணங்கள் வடிவில்;
ஏசுவைக் கண்டேன் இயற்கையின் எழிலில்;
வண்ணமும் வடிவமும் இறைநிலை என்ற
உண்மையை உணர்ந்தேன் உள்ளம் குளிர்ந்தேன்

Thursday, November 27, 2008

இறையறிவு !

இடது சக்தி என்றால்
வலது சிவன் தானே;
இடதும் வலதும் இணைந்தால்
சீவன் தோன்றும் எனலாம்!

சிவனோடு சக்தி சேர்ந்தால்
சிவன் சீவன் என்றாகிறது;
சீவன் என்றால் அறிவு;
அறிவு என்பது சுழுமுனையாகும் !

இடம் வலம் சுழுமுனை
இவை மூன்றும் சரியாய்
இருந்தால் தோன்றும் தன்னுணர்வு;
தன்னை தன்னில் அறிவதேநலம்!

தன்னை அறிவது ;தலைவனை
அறிவது;தலைவனை அறிவது
தன்னுள் தானடங்கி விளங்கும்
இறையை அறிவதேநலம்!

உறவும் நட்பும் !

உறவினும் உயர்ந்தது நட்பு ;அந்த
நட்பினும் உயர்ந்தது ஒன்றில்லை
ஒன்றுக்குள் ஒன்றாவது நட்பு ;
ஒன்றை ஒன்று பினப்பது உறவு !

உறவென்றால் பிரிவும் உண்டு ;
பிரிவென்றால் துயரமும் உண்டு;
பிரிவும் துயரமும் நட்புக்கு இல்லை ;
இணைவது நட்பு பிரிவது உறவு;

பெற்றுகொடுப்பது உறவின் இயல்பு ;
விட்டுகொடுப்பது நட்பின் சிறப்பு;
பெற்றதை கொடுப்பது நட்பின் உயர்வு ;
உற்றதை உணர்வதே உறவின் சிறப்பு;

குசேலன் பெற்றதும் நட்பின் வழியே ;
சுந்தரன் கற்றதும் நட்பின் மொழியே;
கர்ணன் உற்றதும் நட்பின் உயர்வே;
கற்றதும் பெற்றதும் உற்ற நட்பின் சிறப்பே!

Wednesday, November 26, 2008

பிறப்பும் இறப்பும் !

பிறப்பும் இறப்பும் புதிர் என்பார் புரியாதோர்;
பிறப்பையும் இறப்பையும் புரிந்து கொள்ள,
பிறப்பே இறப்பின் மறு வடிவம் என்றாகும் ;
பிறப்பின் சிறப்பே இறப்பென்று விளங்கும் !

விதை அழிந்தால் செடி முளைக்கும் ;
இலை யுதிர்ந்தால் பூ பூக்கும் ;
பூவினுக்குள்ளே காய் இருக்கும்;
காய் அழுகிட கனி யாகும் ;

நிகழ்ந்ததை மறந்து நிகழ்தலில் மகிழ்வோம் ;
மகிழ்தலும் புகழ்தலும் இயல்பென்றிருப்போம்;
இயல்பே இறைஎன்ற உண்மையை உணர்வோம்;
உணர்வே உண்மையென்ற தன்மையை பெறுவோம்;