Showing posts with label tamil poem. Show all posts
Showing posts with label tamil poem. Show all posts

Sunday, April 20, 2008

மெய்ஞானம்

விஞ்ஞானம் மனம் சார்ந்தது அல்ல
மனதை விஞ்சி நின்ற ஞானம்
மனம் கடந்த நிலை; அறிவே ஆதாரம்
மெய்ஞானம் என்றால் உண்மை அறிவு

மனம் மொழி மதம் கடந்த அறிவு
தன்னை அறிவது; தன் இருப்பை அறிவது;
உண்மை அறிவது உயிரை அறிவது
உள்ளதை உள்ளவாறே உணர்வது அறிவு!

கண்டுபிடிப்பு என்றால் கண்களால் அல்ல
கேள்விகளால் விளங்கும் செவிகளால் அல்ல
புலப்படும் ஆனால் புலன்களால் அல்ல
அறிவை கொண்டு எதையும் அறிவதே ஞானம்

விந்தைமிகு இஞ்ஞானம் தன்னை
எந்தையர் ஆயிரம் அறிஞர்கள்
அறிந்தனர், அறிந்ததை அறிந்தவாறே
ஈந்தனர் நமக்கு; அதுவே மெய்ஞானம்!

தாயும் சேயும்

விண்ணில் வெளியாய் திகழும்
கண்ணில் ஒளியாய் மிளிரும்
என்னுள் இயல்பாய் நிகழும்
தன்னுள் தானடங்கி வாழும்
நானறிந்த நீயும் என்னில்
நீயறிந்த நானும் வேறல்ல
சேயறிந்த தாயும் தனில்
தானறிந்த சேயும் வேறல்ல
உடலும் உயிரும் உறைவதுபோல
கடலும் கரையும் இணைவதுபோல
மலரும் மனமும் திகழ்வதுபோல
தாயும் சேயும் வேறுவேறல்ல

இருளும் ஒளியும்

வைகறைக் காலையில் விலகிடும் இருளில்
மையலின் மாலையில் கலந்திடும் இருளில்
மௌனமே மொழியாய் மயங்கிய நிலையில்
மலர்ந்திடும் ஒளியே; வளர்ந்திடும் கலையே!
உன்னை என்னென்பேன்?
எண்ணில் கண் என்பேன்
பெண் என்பேன்; பெருநிலைஎன்பேன்
உன்னில் கலந்தேன்; உயிரில் உணர்ந்தேன்
விண்ணில் பறந்தேன்; வெளியில் கலந்தேன்;
உண்மை உணர்ந்தேன்; என்னை மறந்தேன்
இருளும் ஒளியும் இறையென அறிந்தேன்;
பெருநிலை புரிந்தேன் பேரின்பம் அடைந்தேன்