Monday, April 21, 2008

கேள்வியும் பதிலும்

எனக்கு கேட்கத்தான் தெரியும்;
வாயினால் அல்ல, செவிகளால் தான்;
பதில் என்னிடமே உள்ளது;
கேள்வியும் பதிலும் இறையருள் தானே!

எனக்கு பார்க்கத்தான் தெரியும்;
விழிகளால் அல்ல; உள்ளுணர்வால் தான்;
காட்சி என்னிடமே உள்ளது;
காட்சியும் சாட்சியும் இறையருள் தானே!

எனக்கு வழிபடத்தான் தெரியும்;
மொழிகளால் அல்ல; மெய்யுணர்வால் தான்
வழிபடு என்று என்னை வழிபடுத்துவதே
என்னுள் உறையும் இறையருள் தானே!

கேள்வி என்பது பதிலின் விதையாகும்;
பார்வை என்பது அறிவின் நிலையாகும் ;
இயற்கை என்பது இறைவடிவாகும்;
இறையருள் ஒன்றே ஈடில்லா பதிலாகும்!

திருவருள்

உண்மை இது; நன்மை இது; உயர்ந்தவர்கள்
கண்ட உலகமிது; மண்புலம்
தழைக்க, தென்னவர் உரைத்த
உன்னத ஞான உலகமிது!


விண்ணில் வெளியாய் திகழும்;
கண்ணில் ஒளியாய் மிளிரும்;
மண்ணில் உயிராய் உலவும்;
என்னில் இயல்பாய் விளங்கும்!

நானறிந்த நானும், என்னை
நீயறிந்த நானும் ஒன்றல்ல;
என்ற உண்மையை நீ உணர்ந்தால்
உன்னிலை தானே உயரும்!

அன்று நானும் நீயும் வேறல்ல;
என்று என்னை அறிய எனக்கருள்
செய்த குருவை மறவேன் குருவருள்
பெறுவேன் பெருநிலை அடைவேன்.

Sunday, April 20, 2008

மெய்ஞானம்

விஞ்ஞானம் மனம் சார்ந்தது அல்ல
மனதை விஞ்சி நின்ற ஞானம்
மனம் கடந்த நிலை; அறிவே ஆதாரம்
மெய்ஞானம் என்றால் உண்மை அறிவு

மனம் மொழி மதம் கடந்த அறிவு
தன்னை அறிவது; தன் இருப்பை அறிவது;
உண்மை அறிவது உயிரை அறிவது
உள்ளதை உள்ளவாறே உணர்வது அறிவு!

கண்டுபிடிப்பு என்றால் கண்களால் அல்ல
கேள்விகளால் விளங்கும் செவிகளால் அல்ல
புலப்படும் ஆனால் புலன்களால் அல்ல
அறிவை கொண்டு எதையும் அறிவதே ஞானம்

விந்தைமிகு இஞ்ஞானம் தன்னை
எந்தையர் ஆயிரம் அறிஞர்கள்
அறிந்தனர், அறிந்ததை அறிந்தவாறே
ஈந்தனர் நமக்கு; அதுவே மெய்ஞானம்!

தாயும் சேயும்

விண்ணில் வெளியாய் திகழும்
கண்ணில் ஒளியாய் மிளிரும்
என்னுள் இயல்பாய் நிகழும்
தன்னுள் தானடங்கி வாழும்
நானறிந்த நீயும் என்னில்
நீயறிந்த நானும் வேறல்ல
சேயறிந்த தாயும் தனில்
தானறிந்த சேயும் வேறல்ல
உடலும் உயிரும் உறைவதுபோல
கடலும் கரையும் இணைவதுபோல
மலரும் மனமும் திகழ்வதுபோல
தாயும் சேயும் வேறுவேறல்ல

இருளும் ஒளியும்

வைகறைக் காலையில் விலகிடும் இருளில்
மையலின் மாலையில் கலந்திடும் இருளில்
மௌனமே மொழியாய் மயங்கிய நிலையில்
மலர்ந்திடும் ஒளியே; வளர்ந்திடும் கலையே!
உன்னை என்னென்பேன்?
எண்ணில் கண் என்பேன்
பெண் என்பேன்; பெருநிலைஎன்பேன்
உன்னில் கலந்தேன்; உயிரில் உணர்ந்தேன்
விண்ணில் பறந்தேன்; வெளியில் கலந்தேன்;
உண்மை உணர்ந்தேன்; என்னை மறந்தேன்
இருளும் ஒளியும் இறையென அறிந்தேன்;
பெருநிலை புரிந்தேன் பேரின்பம் அடைந்தேன்

மொழி

மௌனம் என்பது மொழியாகும்;
ஞானம் அதன் வழியாகும்;
விழிவழி மொழிவது எழிலாகும்;
செவிவழி அறிவது இயல்பாகும்.

பாடும் குயிலும் ஆடும் மயிலும்
பேசும் கிளியும் ஓடும் மானும்
கரையும் காகமும் விரையும் மேகமும்
கூறும் குறிப்பும் மொழியாகும்!

கண்களால் கான முடியாதவற்கு
புள்ளிகளால் ஆன ப்ரைல்லி மொழியாகும்
காதுகளால் கேட்க இயலாதவற்கு
விரலசைவில் செய்கை ஒரு மொழியாகும்!

முந்தையர் ஆயிரம் தந்திரம்
சொன்னதும் மந்திரம் என்னும் மொழியாலே
சிந்தையில் பிறந்ததை சொற்களில்
தந்ததும் விந்தைமிகு மொழியாலே!

இரவின் மொழி இருளாகும்
பகலின் மொழி ஒளியாகும்
இயல்பின் மொழி ஒலியாகும்
உயரின் மொழி உறவாகும்!

இசையும் நடனமும் மொழியாகும்
இரண்டும் சேர்ந்தது கலையாகும்
உணர்வே இன்ப மொழியாகும்
இதுவே தெய்வ நிலையாகும்.

இயற்கையின் எழில்

நீலவானம்; பச்சை பூமி
நெடிய மரங்கள்; உயர்ந்த மலைகள்
சிவந்த கனிகள் வண்ணமலர்கள்
என்னை அழைக்கும் இயற்கை எழில்கள்
எழுகின்ற சூரியன்; விழுகின்ற அருவி
குளிர்ந்த நிலவு தென்றல் காற்று
ஓடும் நதியில் நீந்தும் மீன்கள்
என்னை அழைக்கும் இயற்கை எழில்கள்
விண்ணில் பறக்கும் வண்ண பறவை
என்னில் தோன்றும் இன்ப ஊற்று
விழி விரிந்து மொழி மறந்தேன்
என்னை இழந்தேன் இயற்கை எழிலில்.
உறவினைக் கண்டேன் வண்ணங்கள் வடிவில்;
இறைவனைக் கண்டேன் இயற்கையின் எழிலில்;
வண்ணமும் வடிவமும் இறைநிலை என்ற
உண்மையை உணர்ந்தேன் உள்ளம் குளிர்ந்தேன்

இறையருள்

பூத்த தெல்லாம் காய்ப்பதில்லை
காய்த்த தெல்லாம் பழுப்பது இல்லை
பழுத்த தெல்லாம் விழுவதில்லை
விழுந்த தெல்லாம் விளைவதில்லை
விழுந்த தெல்லாம் பூத்திடவேண்டும்
பூத்த தெல்லாம் காய்த்திடவேண்டும்
காய்த்த தெல்லாம் கனிந்திடவேண்டும்
கனிந்ததெல்லாம் பயனுரவேண்டும்
பூக்கும்போது ஒரு நறுமணம்
காய்க்கும்போது ஒரு வாசம்
பழுக்கும்போது ஒரு நிறைகுணம்
முழுமையடைய இறையருள் வேண்டும்
தன்குணம் தான் அறியாது
தன்னை கொடுத்து தானும் வாழும்
இயற்கையின் நிலையில் நானும்
இயல்பாய் வாழ இறையருள் வேண்டும்
விண்ணில் உலவும் நிலவின் குளிரும்
மண்ணில் மலரும் மலரின் மணமும்
தன்னில் இயல்பாய் கண்ணில் கனிவும்
என்னில் பெறவே இறையருள் வேண்டும்