Wednesday, July 23, 2008

இறை நிலை

கல் கரைந்தால் மண்ணாகும் அந்த
மண்ணில் ஒரு வாசம் வீசும்
காய் கனிந்தால் பழமாகும் அந்த
பழத்தில் புது சுவை கூடும்

மொட்டவிழ்ந்தால் மலராகும் அந்த
மலரில் நறுமணம் பரவும்
பிறை வளர்ந்தால் முழு நிலவாகும் அந்த
நிலவில் ஒளி குளிர் கூடும்

மண்ணில் பொழிந்த மழையும்
மரத்தில் பழுத்த பழமும்
செடியில் பூத மலரும்
விடியலில் எழுகின்ற சூரியனும்

விண்ணில் தவழும் நிலவும்
பண்ணில் காசயும் இசையும்
என்னில் ஊரும் கவியும்
இறை நிலை இவைஎன்று அறிந்தேன்.

இறை பெருமை

காதலர்களை உலகமே காதலிக்கும்
அவர்தம் பெற்றோர்களை தவிர
கற்றாரை கற்றோர் காமுறுவர்
அவர்தம் உற்றாரை தவிர

வைகையில் வெள்ளம் புரண்டாலும்
ஆற்றோரம் குடிஇருப்போர் அல்லலுறுவர்
தாமரையில் வண்டு வந்து தேன்குடிக்கும்
இலையில் இருக்கும் மண்டூகம் அறியுமோ தேன்சுவையை

நிழலுக்கு கிடையாது நினைக்கும் தன்மை
விழலுக்கு விளங்காது நீரின் அருமை
தழலுக்கு தெரியாது உயரின் உண்மை
கழலுக்கு புரியாது கால்களின் பெருமை

அடர்ந்து படர்ந்து நிறைந்து நிற்கும்
உள்ளம் கடந்து உயிராய் விளங்கும்
கதிரும் நிலவும் கண்களாய் ஒளிரும்
இறை பெருமை யார்தான் அறிவாரோ!

இறை புதிர்

கற்பனைக்கு எட்டாதது கைகளில் சிக்காதது
அற்பர்களின் அறிவுக்கு அகப்படாதது
அற்புதங்களுக்கு எல்லாம் ஆதார நிலையது
பொற்பதம் அளித்து பூரிக்க வைப்பது

மனம் கடந்து மயங்கிய நிலையில்
இனம் கண்டு இன்பம் அளிப்பது
உணர்வுகளுக்கு எல்லாம் ஊற்று கண்ணது
உண்மையை உணர்ந்த உன்னத நிலையது

புதிராய் தெரியும் புலன்களை மயக்கும்
கதிராய் ஒளிரும் நிலவாய் குளிரும்
எளிதாய் இருக்கும் இயல்பாய் திகழும்
இறையென அறிந்தால் இன்பம் பெருகும்

இயற்கையின் நியதி

நடக்கணும் என்றால் நடந்தே தீரும்
பிறக்கணும் என்றால் பிறந்தே தீரும்
நடப்பதை எவரும் தடுப்பது கடினம்
பிறப்பதை எவரும் தவிர்ப்பது கடினம்.

நடந்ததை ஏற்றலும் பிறந்ததை போற்றலும்
கடந்ததை மறத்தலும் சிறந்ததை நினைத்தலும்
நிகழ்தலில் இருத்தலும் இருத்தலில் மகிழ்தலும்
இயற்கையின் நியதி இதுவென உணர்க.

ஆக்கமும் ஊக்கமும் உயர்ந்தோர் மாண்பது
போற்றலும் புகழுதலும் புண்ணியர் இயல்பு
மாற்றமும் மயக்கமும் மனதின் இயல்பு
தோற்றமும் மறைவும் இயற்கையின் நியதி.

மரம்

வேரில் உண்டு இலையில் சிரிக்கும்
ஊனில் கலந்து உயிராய் திகழும்
தேரில் இணைந்து கலையாய் மிளிரும்
நீரில் மிதந்து படகாய் காக்கும்.

நீர் கொடுக்க நிழல் கொடுக்கும்
யார் பசிக்கும் கனி கொடுக்கும்
வாழும் பொழுது மரமாய் நிற்கும்
வீழ்ந்த பின்னும் துணையாய் தொடரும்.

தன்னில் பழுத்த பழங்களை
தான் உண்பது இல்லை
தன்னில் படர்ந்த நிழலில்
தான் அமர் வதும் இல்லை.

மேலென்று கீழென்று ஏதுமில்லை
உயர்வென்று தழ்வேன்ற நிலையுமில்லை
சூதும் வாதும் புரிவதுமில்லை
பேதம் அறியாது பிரிவும் உணராது .